பக்கங்கள்

வியாழன், 1 டிசம்பர், 2022

காலமும் நானும்

 

காலமும் நானும்:-

நான் விழுந்து விழுந்து சிரிப்பதை பார்த்து விட்டு என்னருகே வந்த காலம் ஏன் இப்படி சிரிக்கிறாய் என்றது.. நான் அதனிடம் காரணம் கூட சொல்ல முடியவில்லை.. என் சிரிப்பை அடக்கி..காலமோ பொறுமையிழந்து முதலில் சிரிக்காமல் சொல் என்றது கொஞ்சம் செல்லமாக கோபித்து..

நான் அதனிடம் சாலையில் அலைபேசியை காதில் வைத்துக் கொண்டு செல்லும் ஒரு இளைஞனை காட்டி அவன் தான் காரணம் என்றேன்.. அப்படி என்ன தான் செய்தான் அவன் நீ இப்படி விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு என்றது காலம்..

அவன் அலைபேசியில் அவன் காதலியின் பெயரை குறிப்பிட்டு நீ ஒரு அமிர்த கடல் என்றான்.. எதிர் முனையில் என்ன சொன்னார்களோ தெரியவில்லை.. அவன் மீண்டும் மீண்டும் காதல் கவிதைகளை சொல்லிக்கொண்டே இருக்கிறான் அவளை சமாதானம் செய்ய என்றேன்..

இதற்கு போய் இப்படி ஏன் நீ சிரிக்கிறாய்.. அவன் காதலி அவன் ஏதேதோ சொல்லி விட்டு போகிறான்.. அதில் உனக்கு என்ன சிரிப்பு என்றது..

எனக்கு இப்போது கோபம் வந்து விட்டது காலத்தின் மேல்..நீ எவ்வளவு பெரிய ஆள்... இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது....

இதை எல்லாம் விட்டு விட்டு காதல் மயக்கத்தில் அமிர்த கடல் அமிர்த ஆறு என்று சொல்லி பிதற்றுகிறானே..பிதற்றுவதில் ஒரு நியாயம் வேண்டாம் என்றேன்..

ஓ அதுவா செய்தி.. அவன் திருமணம் செய்து கொண்ட பிறகு இப்படி பிதற்றுகிறானா பார்க்கலாம் என்றது சிரித்துக் கொண்டே..

அதற்காக தான் விழுந்து விழுந்து சிரித்தேன்..

இந்த மோகம் இருக்கிறதே அது மிகவும் மோசமானது என்றேன்..

ஆமாம் ஆமாம்.. எல்லோரும் உன்னை போல தத்துவம் பேசி திரிந்தால் எனக்கு பொழுது போக வேண்டாமா என்றது நகைச்சுவையாக..

அதுவும் சரிதான் என்று சொல்லி விட்டு நான் உள்ளே செல்வதை பார்த்து நான் எதற்காக செல்கிறேன் என்று புரிந்து கொண்டு எனக்கு தற்போது கொஞ்சம் பிளாக் காபி போதும் என்றது காலம்..

கண்டிப்பாக இதோ எடுத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு நகர்ந்தேன் சமையலறையை பார்த்து..

#காலமும்நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக