பக்கங்கள்

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

சகிப்புத்தன்மை

அன்பர்களே வணக்கம்.
      தற்போது நாம் பார்க்க இருப்பது சகிப்புத்தன்மை. இன்று எவரிடமும் கொஞ்சமும் இல்லாதது.மன்னிக்கவும். பெரும்பாலானவர்களிடம் இல்லலாதது.ஏன் எங்கே சென்றது அந்த நல்ல குணம் நம்மைவிட்டு?யோசிக்க வேண்டிய விசயம். அப்படி தானே அன்பர்களே.
   அப்போதெல்லாம் அதாவது அந்த காலத்தில் எல்லாம் கூட்டுகுடும்பம் இருந்தது. அந்த கூட்டுகுடும்பத்தில் அனைவரும் பரந்த மனப்பான்மையோடு இருந்தார்கள். ஒருவருக்கு ஏதாவது ஒன்று என்றால் மற்றவர்கள் பதறி விடுவார்கள். ஒருவர் செய்யும் தவறை சுட்டி காட்டி திருத்துவார்கள்.மன்னித்தும் விடுவார்கள். ஆனால் இன்று சின்ன குடும்பம் தான். ஆனால் சகிப்புத்தன்மை இல்லாமல் போனதால் நாம் அனைவரும் துயரப்படும்படி சிறுகுழந்தைகள் கூட துயர முடிவை எடுக்கிறார்கள். கணவன் மனைவி இருவருக்குள்ளுமே விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் போனதால் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது.
   ஒன்றுக்கும் பொறாத விசயங்களை ஊதிஊதி பெரிதுப்படுத்தி குடும்பத்தை விளையாட்டு மைதானமாகக்கூட இல்லை ஒரு குஸ்தி போடும் இடமாக மாற்றி விட்டார்கள். இதைப்பார்த்து வளரும் குழந்தைகள் எப்படி இருப்பார்கள். கொஞ்சம் சிந்தியுங்கள் நேயர்களே.
        குழந்தைகளுக்கு முன்மாதிரியாக வாழவேண்டிய நாம் ஒரு எதிரியைப்போல உருவாக்கி கொண்டு இருக்கிறோம். வீட்டில் உள்ள பெரியவர்கள் எதையாவது குழந்தைத்தனமாக செய்யும் போது அதை கேலி கிண்டல் செய்து அவர்களை நம் குழந்தைகள் முன்னால் அவமானப்படுத்துகிறோம்.இது சரிதானா. குடும்பத்தில் உள்ள பெரியவர்களை பொறுமையோடு எவ்வாறு கவனிக்க வேண்டும் என்று நாம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதை விட்டு விட்டு நாம் பெரியவர்களை குற்றம் குறைகூறி சகிப்பு தன்மை கொஞ்சம் கூட இல்லாமல் சொல்வதால் இதை பார்த்து பார்த்து வளரும் குழந்தைகள் மனதில் ஆழமாக நீங்கள் நடந்துக்கொள்வது பதிந்து விடுகிறது. பிறகு எதிர்கால முதியவர்களாகிய உங்களை அவ்வாறே நடத்துகிறது.இதை எண்ணி எண்ணி உள்ளுக்குள்ளேயே உங்களால் அழதான் முடியும். வேறு ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் கர்மவினை அது.நீங்கள் என்ன கொடுத்தீர்களோ அது திரும்பவும் உங்களுக்கே எந்தவித சேதாரமும் இல்லாமல் உங்களிடமே வந்து விடுகிறது.
       ஒரு இல்லத்தில் சமையல் என்றாவது ஒருநாள் தாமதம் ஆனால் ஊரையே கூட்டிவிடும் அளவிற்கு சத்தம் போடுவது எதனால்?.இது சாதாரண வருமானம் உள்ள வீட்டில் கண்கூடாக பார்க்கிறோம். மேலும் ஒரு மனைவிக்கு என்றாவது ஒருநாள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் மனைவியை அன்பாக ஆதரவாக பார்த்து கொள்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால் கணவனுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் பாசக்கார மனைவி அழுது புலம்பி எத்தனை வேண்டுதல் வைக்கிறாள்.அவளுக்கு அவ்வளவு சகிப்பு தன்மை  இருக்கும் போது உங்களுக்கு ஏன் இல்லாமல் போகிறது?.இது அனைத்து இல்லத்தரசிகளின் கேள்வி. மேலும் இதற்கு விசால மனமும் பொறுமையும் இல்லாததை தவிர வேறு என்ன இருக்க முடியும்?.
     அதேபோல் குழந்தைகள் விசயத்திலும். அதுவும் இந்த கால குழந்தைகள் செய்யும் சேட்டைகள் ஒரு அளவே இல்லை. நான் சொல்வேன் இதை சமாளிக்கும் அம்மாக்களுக்கு அரசாங்கம் கூப்பிட்டு வைத்து பரிசு தரலாம். வீட்டில் உள்ளவர்கள் பாராட்டாவிட்டாலும் திட்டாமலாவது இருக்கலாம். இவர்களை சமாளிக்க ஒரு தனி சகிப்பு தன்மை வேண்டும்.ஆனால் இந்த கணவன்மார்களிடம் இந்த குழந்தைகளை ஒரு ஒருமணிநேரம் பார்த்து கொள்ள சொன்னால் ஓடிவிடுகிறார்கள்.இவர்கள் சகிப்பு தன்மையை வரவழைத்து கொள்ளாமல் மனைவிமேல் பாரத்தின் மேல் பாரத்தை தூக்கி வைத்து அவளை சுமைதாங்கி ஆக்கினால் அவள் மனசுமை அதிகமாகி மன அழுத்தத்தால் மிகவும் சோர்ந்து விடுகிறாள்.எந்த வேலையையும் இருவரும் பகிர்ந்து செய்வதற்கு முதலில் மனப்பக்குவம் வேண்டும். இது இருந்தால் சகிப்பு தன்மை தானாக வந்து விடும்.
   சரி நேயர்களே. இன்று உங்களுக்கு சலிப்பு வரும் அளவிற்கு ஆலோசனைகள் வழங்கிவிட்டேன்.மீண்டும் ஒரு பதிவில் உங்களை நான் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.🖐️🖐️🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக