பக்கங்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

இருமைகள்

அன்பர்களே வணக்கம்.
            இன்று நாம் பார்க்க இருப்பது இருமைகள்.அதாவது இரட்டைகள்.ஒன்றை விட்டு ஒன்று எப்போதும் இருக்காது.ஆனால் எதிர் எதிர் பண்புகளைக்கொண்டது.இவை இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. இதில் ஒன்றை மட்டும் மக்கள் விரும்பி வரவேற்பார்கள்.மற்றொன்று தானாக மனிதனை பார்க்க வந்தாலும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக அதனிடம் முறைத்து சண்டைக்கு நிற்பார்கள்.
            என்ன நேயர்களே நான் சொல்ல வந்த விசயம் புரியவில்லையா? .மேலும் நீங்கள் என்னை பற்றி கணிப்பதும் எனக்கு தெரிகிறது. அதாவது சொல்ல வந்த விசயத்தை விரைவாக சொல்லி விட்டு செல்ல வேண்டியதுதானே.ஏன் இத்தனை முன்னோட்டம்  என்று தானே நினைக்கிறீர்கள்.அதுசரி.ஆனால் இப்படி நான் முன்னோட்டம் கொடுத்தால் தான் நான் சொல்ல வந்த விசயம் என்ன என்று கொஞ்சம் காது கொடுத்து கேட்கிறீர்கள்.இல்லை என்றால் இதுதான் எனக்கு தெரியுமா என்கிற மனப்பான்மை. அதனால் தான்.
      சரி.நீங்கள் கோபப்படாதீர்கள்.நான் சொல்ல வந்த விசயத்தை சொல்லி விடுகிறேன். இருமைகள் என்பது பாவமும் புண்ணியமும்.இதை நாம் அனுபவித்து தான் தீர வேண்டும். இதைத்தான் கர்மா என்று சொல்வார்கள். இந்த இருமைகள் இல்லை என்றால் நாம் கர்மாவை அனுபவிப்பது சாத்தியமே இல்லை.
           நமது வாழ்வில் இடைவிடாமல் பயணிப்பது இந்த இருமைகள் தான். இவற்றை நாம் எப்படி கையாளுகிறோமா அப்படி தான் நமது வாழ்க்கை இன்பமாகவோ துன்பமாகவோ நமக்கு அமையும்.
                முதலில் நாம் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும். இன்பம் வந்தால் ஆகாஓகோ என்று குதிப்பதும் தோல்வி வந்தால் மிகவும் சோர்ந்து ஓரிடத்தில் உட்கார்ந்து விடுவதும் நாம் செய்யக்கூடாத ஒன்று. ஆனால் நம்மால் இதை இந்த பழக்கத்தை அவ்வளவு எளிதாக கைக்கொள்ள இயலாது. நமது கடுமையான முயற்சியில் கண்டிப்பாக கைக்கொள்ள இயலும்.
              நமது வாழ்க்கையில் நடக்கும் இன்பமும் துன்பமும் இயல்பானதுதான் என்பதை நமது மனதிற்கு உணர்த்த வேண்டும். இவைகளால் எப்போதும் மனது பாதிப்படையாமல் இருக்க வேண்டும். அப்போது தான் இது சாத்தியம்.
            முதலில் நாம் இந்த இரட்டைகளின் தன்மையை புரிந்து கொள்ள முயற்சித்தால் போதும். அதாவது புண்ணிய கணக்கில் இன்பமும் பாவகணக்கில் துன்பமும் சேர்கிறது. இந்த இரண்டு கணக்கும் இருப்புசீட்டு போன்றது.ஒரு நிறுவனம் தனது கணக்காளரைக்கொண்டு இருப்பு சீட்டு தயாரிப்பது போலத்தான் இதுவும். பாவம் புண்ணியம் இரண்டும் சமமானால் நமது பிறவிபிணி ஒழிந்தது என்று அர்த்தம்.
         பிறவிபிணி ஒழிந்தால் நாம் இந்த பூமிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. அப்போது நமது கணக்கு இறைவன் பார்வையில் சமமாகிறது.இதை நம்மால் செய்ய இயலுமா என்ற கேள்வி எழுகிறது. ஆம். இந்த கேள்வி நியாயமானதுதான்.நாம் இதை எவ்வளவு முயன்றாலும் சமப்படுத்த முடியவே முடியாது. ஏனெனில் எந்த கர்மாவை தொட்டாலும் பாவமும் புண்ணியமும் பிரிக்க முடியாது. கர்மாவோடு எப்போதும் இந்த தோஷம் இருக்கும். ஏன் புண்ணியத்தையும் தோஷம் என்று சொன்னேன் என்றால் அதுவும் நமக்கு பிறவியை கொடுப்பதால்தான்.
         நாம் எந்த காரியத்தை செய்தாலும் அதனால் வரும் பாவபுண்ணியத்தை நாம் இறைவன் திருவடியில் சேர்த்து விட்டால் நாம் இந்த தோஷத்தில் இருந்து விடுபடலாம் நிச்சயமாக. ஏனெனில் நமது கர்மா என்பது கணக்கற்றது.அத்தனையும் நம்மால் கணிக்க இயலாது. அதனால் தான் அந்த பொறுப்பை நான் இறைவனிடம் ஒப்படைக்க சொன்னேன்.
          என்ன நேயர்களே நான் சொல்ல வந்த கருத்தை அப்படியே உள்வாங்கி கொண்டு நீங்கள் வாழ்க்கையில் பின்பற்ற முயற்சி செய்தால் கண்டிப்பாக ஆனந்தமான வாழ்க்கை நிச்சயம்.
         இருமைகளில் இருந்து விடுபடுவது எப்போதும் ஆனந்தம் தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக