பக்கங்கள்

சனி, 4 ஆகஸ்ட், 2018

விவாதம்

அன்பர்களே வணக்கம்
             இன்று நாம் பார்க்க இருப்பது விவாதம். நாம் இப்போது எங்கே சென்றாலும் எங்கே திரும்பினாலும் விவாதம் நடக்கிறது. ஆனால் அந்த விவாதங்கள் ஆரோக்கியமான வழியில் இருக்கிறதா என்று பார்த்தால் நாம் யோசிக்க வேண்டிய விசயமாகவே இருக்கிறது.
              எந்தவொரு விசயமும் விவாதத்திற்கு உரியது தான். அதை நாம் மறுப்பதற்கு இல்லை. ஆனால் நாம் விவாதத்தை மிகவும் நிதானமாகவேம் ஆரோக்கியமாகவும் செய்கிறோமோ என்பது தான் நாம் இங்கே விவாதம் ஆக்குகிறோம்.வீட்டில் விவாதம் வெளியில் விவாதம் அலுவலகத்தில் விவாதம் .....இப்படி விவாதத்திற்கு ஒரு அளவே இல்லாமல் இருக்கிறது.
           அதுவும் இந்த அரசியல் விவாதம் என்று வந்து விட்டால் போதும். நாகரிகம் என்பது கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு மிகவும் மோசமாக தரம் தாழ்ந்து இருப்பது வேதனை அளிக்கிறது. ஏன் இவ்வளவு வெறுப்பு துவேஷம் என்று பொதுமக்களான நமக்கு புரியாதபுதிர்.
         ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தலைவரை பிடிக்கலாம்.ஒருவருக்கு பிடித்த தலைவர் இன்னொருவருக்கு பிடிக்காமல்போகலாம்.ஆனால் தலைவர்களை பற்றி பேசும் போது நமக்கு அந்த தலைவரை பிடிக்காமல் இருந்தால் நாம் ஆரோக்கியமாக நமது விவாதத்தை எடுத்து வைக்க வேண்டுமே தவிர அவரது தனிப்பட்ட வாழ்வை பற்றி விமர்சனம் செய்வதோ அல்லது மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி அவர்களை திட்டுவதோ நமது தரம்தாழ்ந்த எண்ணங்களையே பிரதிபலிக்கும்.
   மேலும் இங்கு ஏன் அப்படி நடக்கிறது என்று பார்த்தால் யாரையோ திருப்திப்படுத்தவே இந்த மாதிரி செயல்கள் நடக்கிறது. இதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் கண்டிக்க வேண்டும். எதையாவது காரியத்தை சாதித்து கொள்ள இப்படி நடந்துக்கொள்வது மிகவும் கண்டிக்கதக்கது. எப்போதும் அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக நாம் இருக்க வேண்டும் ஒழிய நாமே தரம் தாழ்ந்து நடந்துக்கொள்வது கண்டிக்கத்தக்கது.இது பொதுஅமைதியை சீர்குழைக்கும் செயல். அதனால் இதனை நாம் ஊக்குவிக்கக்கூடாது.
               அதுசரி. எந்த விவாதமாக இருந்தாலும் அடுத்தவரை நாம் வழிநடத்த பயன்பட வேண்டுமே தவிர நம்மிடம் ஒரு வெறுப்பை விதைக்க கூடாது. விவாதம் எதற்காக செய்கிறோம். ஒருவரின் தவறை நாம் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர அவர்களை புண்படுத்தக்கூடாது.மேலும் அவர்கள் கவனத்திற்கு செல்லாத ஒரு விசயத்தை தான் நாம் விவாதிக்கிறோம்.அதனால் நாம் அதனால் ஏற்படும் விளைவுகளை மிக மென்மையாக அதே சமயத்தில் அழுத்தம் தேவையான இடத்தில் கொடுத்து அவர்கள் உடனடியாக செயல்படுமாறு நமது செயல்கள் இருக்க வேண்டும். அதைவிடுத்து குழாயடி சண்டை போடுவதால் ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தை சீர்குழைக்கும் செயல்களிலேயே நாம் ஈடுபடுகிறோம் என்று நினைவில் கொள்ளுங்கள்.
     வீட்டில் கூட ஒருத்தரின் செயல்களை விவாதமாக செய்யாமல் அவர்கள் தவறை மிக எளிமையாக அதே சமயத்தில் அவர்கள் திருந்தும் படி சுட்டி காட்டுங்கள். அதை விடுத்து மிக நீண்ட விவாதம் ஆக்கி அவர்களை இன்னும் மோசமான நடவடிக்கையில் ஈடுபடும் படி தயைகூர்ந்து தள்ளி விடாதீர்கள்.
     என்ன நேயர்களே நான் சொல்லும் கருத்து சரிதானே.இதை விவாதமாக்கி என்னை விவாதப்பொருளாக எடுத்து கொள்ளாதீர்கள்.😀
    ஆரோக்கியமான விவாதம் என்றுமே ஆரோக்கியமான சமுதாயத்தை வளர்க்க உதவி நாமும் மன உளைச்சல் இல்லாமல் நிம்மதியாக ஆனந்தமாக வாழலாம். சரி நேயர்களே அடுத்த விவாதத்தில் சந்திப்போமா😀.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக