பக்கங்கள்

திங்கள், 30 ஜூலை, 2018

சஞ்சலங்கள்

அன்பர்களே வணக்கம்.
         இன்று நாம் பார்க்க இருப்பது சஞ்சலங்கள். நம் மனது எப்போதும் எதையோ நினைத்து நினைத்து சஞ்சலம் அடைவது இயல்பு தான். ஆனால் சஞ்சலங்களை நாம் கையாளும் விதத்தில் உள்ளது அது நிரந்தரமாக நம்மிடம் தங்கிவிடுவது இல்லை போய்விடலாமா என்று சஞ்சலங்கள் தீர்மானிப்பது நம் முடிவை பொறுத்துதான்.
         அதனால் நாம் சஞ்சலங்களை நாம் நினைத்து ஒரு மூலையில் உட்கார்ந்து விடக்கூடாது. அதை நம் மனதில் இருந்து விரட்டி அடிப்பதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். அது எப்படி என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.ஏனெனில் நாம் அனைவரும் சஞ்சலங்களால் ஏதோவொரு தருணத்தில் பாதிக்கப்பட்டவர்களே.
               சரி நான் சொல்வதை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். முதலில் நாம் சஞ்சலப்படும் விசயங்களை பற்றி தெளிவாக நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம் ஆகும். எந்த விசயத்தில் சஞ்சலம் ஏற்படுகிறதோ அதை நாம் தீர ஆராய வேண்டும். நாம் போகும் பாதை சரிதானா என்று ஆராய வேண்டும். சரிதான் என்று உணர்ந்தால் நாம் நம் சஞ்சலங்களை ஒருபக்கம் ஒதுக்கி வைத்து விட்டு நமது வேலையில் ஈடுபட வேண்டும். ஏனெனில் தடைகள் சஞ்சலங்கள் ரூபத்தில் கூட வரும்.
            மற்றொன்று சஞ்சலங்கள் மற்றவர்களால் வருவது.அது எப்படி என்றால் நீங்கள் ஒரு காரியத்தில் ஈடுபட்டு இருக்கும் போது மற்றவர்கள் கருத்து கந்தசாமிகளாகி கருத்து சொல்கிறேன் என்று குழப்பி விடுவார்கள். தெளிவாக ஒரு முடிவை எடுத்த பிறகு அவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம். மிகவும் நல்ல யோசனையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் செயல்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும் பட்சத்தில் உங்கள் பட்ஜெட்டில் சிறிய மாற்றத்தை தந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள்.இல்லை என்றால் அதை ஒரு பக்கம் தூக்கி வைத்துவிட்டு நீங்கள் தெளிவான உங்கள் பாதையில் பயணம் செய்யுங்கள்.
             ஒரு காரியம் வெற்றி அடைவதற்கு முன்னால் நமக்கு எவ்வளவோ சஞ்சலங்கள் நம்மை மோதி நம்மை ஒரு கைபார்த்து விடும். இது அனுபவ உண்மை. ஆனால் நாம் இந்த சஞ்சலங்களை நமது மனோவலிமையால் அடக்கி ஆள வேண்டும். சஞ்சலங்கள் எப்போதும் நம்மை ஆளவிடக்கூடாது.
          நம்மில் பலருக்கு இருக்கும் கெட்ட பழக்கம் என்ன என்றால் ஒரு காரியத்தை அவசரம் அவசரமாக  ஆரம்பித்து விட்டு பிறகு மற்றவர்கள் சொல்லும் கருத்தை கேட்பது.நமது திருவள்ளுவர் சொல்வது போல தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுரவும் தீரா இடும்பை தரும். அதனால் ஒரு செயலை ஆரம்பிக்கும் முன் ஆயிரத்தெட்டு முறை ஆராயுங்கள்.ஆனால் முடிவு எடுத்தபின் சஞ்சலங்களுக்கு இடம் அளிக்காதீர்கள்.
         ஒவ்வொரு மனிதனுக்கும் எப்போதும் திடசித்தம் இருக்க வேண்டும் அதாவது திடமான மனம். எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற மனோபாவம் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் எடுத்த காரியத்தை முடிக்க முடியும்.
          அதைவிடுத்து நாம் சஞ்சலங்களுக்கு நமது மனதில் இடம் அளித்து விட்டால் நாம் அதோகதிதான். நமது வெற்றியும் தோல்வியும் நாம் சஞ்சலங்களை எப்படி கையாளுகிறோம் என்பதை பொறுத்து தான் இருக்கிறது.
         அதனால் நாம் சஞ்சலங்களை ஒரு கைபார்த்து வாழ்க்கையில் ஆனந்தமாக வாழ முயற்சி செய்வோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக