பக்கங்கள்

வெள்ளி, 1 மே, 2026

நான் நேசிக்க மறந்த அந்த நொடிகள்...


 ஜெயிப்பது தோற்பது 

பற்றி எல்லாம் நான் எப்போதும் 

கவலை கொண்டதில்லை!

நான் ஆழ்ந்த காதலோடு 

நேசிக்க மறந்து 

இயந்திரத்தனமாக எப்போதாவது 

ஓடிக் கொண்டிருக்கும் 

அந்த நேரத்தை நினைத்து தான் 

தடுமாறி கலங்கி இருக்கிறேன்... 

தொலைக்க கூடாத 

அந்த மதிப்பு மிக்க 

பொக்கிஷத்திற்காக...

நான் அழுது விடுவதை பார்த்து 

என்னவோ ஏதோ என்று 

பதறி விடுகிறார்கள் அங்கே 

என் மீது பெரும் நேசங் கொண்ட 

சில மனிதர்கள்!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/05/26.

உயிரோட்டமாக ஜீவித்து இருக்கும் கலை...

 


ஏதேதோ தேடி ஓடிக் கொண்டே 

இருக்கும் மக்களின் 

தீராத அந்த நெடுந்தூர ஓட்டத்தின் 

எல்லை எது என்று 

தெரியவில்லை...


வறண்ட பாலைவனத்தில் 

தண்ணீர் தேடி அலையும் 

அந்த பறவைக்கு கூட 

ஒரு அர்த்தம் இருக்கிறது...

உயிர் மீட்டலின் வலி அது...

தன்னை தானே 

மாய்த்துக் கொள்ள 

மனம் இல்லாமல் 

இறுதி வரை 

போராடிக் கொண்டிருக்கும் 

தன் முனைப்பின் நம்பிக்கை அது...


அந்த பறவைக்கு இங்கே 

எதையும் தன் வசப்படுத்திக் கொள்ள 

தேவையில்லாத மனநிலை அது...

அதன் தேவை எல்லாம் 

தான் ஜீவித்து இருக்கும் 

காலத்தை உறுதி செய்துக் கொள்ள 

போராடும் நிலையது...


இங்கே அந்த சிறு பறவையோடு 

ஒப்பிட்டு பார்க்கும் போது கூட 

இங்கே ஈசல் போல 

இயந்திரத்தனமாக ஓடும் 

மனிதர்கள் தோற்று விடுகிறார்கள்!


இங்கே தன்னிறைவு எனும் 

மனநிலையை தாண்டி 

எதற்கும் மதிப்பில்லை என்று 

இத்தனை தூரம் 

நான் அந்த சாலையில் 

மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும் 

அந்த சிறு பூச்சியிடம் 

சொல்லிக் கொண்டு 

இருக்கும் போதே 


அந்த ஈசல் கூட்டத்தில் இருந்து 

ஒருவன் என்னை 

வேகமாக தள்ளியதும் அல்லாமல் பைத்தியம் தனியாக 

ஏன் இங்கே பேசுகிறாய்...

இங்கே பார் நாங்கள் 

ஓடிக் கொண்டிருக்கிறோம் 

நீ நட்ட நடுசாலையில் 

ஒன்றுக்கு உதவாமல் 

வெட்டிக் கதையை 

தன்னந்தனியாக பேசிக் கொண்டு 

இருக்கிறாய்..

நேரம் போனால் வராது...

தள்ளி நில் சித்தம் கலங்கியவனே 

என்று ஆக்ரோஷமாக 

கோபத்தை காட்டி விட்டு 

ஓடுகிறான்...


அவன் என்னிடம் பேசிய 

அந்த சில நிமிடங்களில் 

அவனோடு பிரயாணம் செய்த 

கூட்டம் அவன் ஒருத்தன் 

தன்னோடு பிரயாணம் 

செய்ததையே

மறந்து விட்டு புள்ளியாக 

மறைந்த போனார்கள்...


அவனோ என்னை திரும்பி 

முறைத்து பார்த்தான்...

நான் சலனமில்லாமல் 

அவனை நோக்கி ஒரு புன்னகையை 

உதிர்த்து விட்டு 

அந்த பூச்சிக்கு 

இன்னொரு தத்துவ சாரலை 

போதித்துக் கொண்டு 

இருக்கிறேன்...

அதுவும் மெல்ல ஊர்ந்து கொண்டே 

என் கதையை கேட்டு 

சலிப்பில்லாமல் 

தன் பயணத்தை 

புத்துணர்ச்சியோடு 

தொடர்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/05/26.







புத்தக பை சுமந்து பட்டாம்பூச்சியாக திரிந்த அந்த நாளில்...

 




புத்தக பை சுமந்து 

பட்டாம்பூச்சியாக திரிந்த 

அந்த காலத்தில் 

நினைவுகள் எல்லாம் 

மனதின் ஒரு மூலையில் 

தித்திக்கும் வெல்லமாக 

சிதறிக் கிடக்கிறது...


நானும் என் நண்பர்களும் 

விடுமுறை நாட்களில் 

ஓயாமல் சுற்றி சுற்றி வந்த 

அந்த ஆலமரத்தின் நிழல் 

மட்டும் ஒரு அடையாள சின்னமாக 

அங்கே ஊரின் நடு பகுதியில் 

எங்கள் வருகைக்காக 

ஏங்கி போவோர் வருவோரை 

உற்று உற்று பார்க்கிறது...


அந்தவொரு விடுமுறை நாளில் 

நான் மட்டும் நிறைய எலந்தை பழங்களை 

தன் பாவாடையில் நிறைத்து 

ஓடுவதை பார்த்து 

நீ என்னை துரத்தி வந்து 

அத்தனை பழங்களையும் 

சிதறடித்து சண்டை போட்டு 

என் பேச்சு கா விட்டு 

பேசாமல் வேகமாக சென்ற 

நாள் மட்டும் இன்னும் 

அப்படியே இருக்கிறது 

என் மனதின் சாலையில் 

ஒரு பெரும் பள்ளமாக...


அது நடந்து பல வருடங்களாகி 

விட்ட போதும்

இப்போதும் 

எங்கே எலந்தை பழங்களை 

பற்றிய பேச்சுக்கள் 

வந்தாலும் நீ அங்கே 

சத்தமில்லாமல் 

என் எதிரே கோபமாக 

நின்று விடுகிறாய்...


தற்போது நீ எங்கே என்று 

தெரியவில்லை என்றாலும் 

உனக்கு நம் சண்டை 

ஞாபகம் இருந்தால் 

எப்போதேனும் நாம் சந்திக்கும்

தருணத்தில் 

என்னிடம் பழம் விட்டு விடு...


நீ எனக்கு தந்த காயை 

வைத்துக் கொண்டு 

நான் படும் 

அவஸ்தையை பார்த்து 

இங்கே என்னை பலபேர் 

கேலி செய்கிறார்கள் 

என் காதலே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/05/26.